பாடகியாக விரும்பி நடிகையான ராஷிகன்னா
|நடிகை ராஷிகன்னா சினிமாவில் பாடகியாக வேண்டும் என்று தான் முதலில் ஆசைப்பட்டு பயிற்சி வகுப்புகளுக்கு சென்றதாக கூறியுள்ளார்.
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார். திருச்சிற்றம்பலம், சர்தார் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள ராஷிகன்னா தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.
நடிகையானது குறித்து ராஷிகன்னா அளித்துள்ள பேட்டியில், "நான் சினிமாவில் பாடகியாக வேண்டும் என்றுதான் முதலில் ஆசைப்பட்டேன். இதற்காக பயிற்சி வகுப்புகளுக்கு சென்றேன். ஆனால் வணிக வளாகத்தில் இலவசமாக கிடைக்கும் ஒரு பொருளுக்காக நான் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் சினிமாவுக்குள் கொண்டு வந்து விட்டது.
இந்தியில் வெளியான மதராஸ் கேப் எனது முதல் படம். அதில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் பெயர் வாங்கி கொடுத்தது. தெலுங்கில் வந்த ஊஹலு குச குசலாடே படத்தில் நடித்த பிறகு எனக்கு வாய்ப்புகள் வரிசை கட்டின. தமிழிலும் நடித்து பெயர் பெற்றேன்.
தற்போது திரைப்படங்களில் மட்டுமல்லாமல் வெப் தொடர்களிலும் நடிக்கிறேன். நான் படித்து பெரிய ஆளாக வருவேன் என்று பெற்றோர் கனவு கண்டார்கள். பாடகியாக பயிற்சி பெற்று பின்னணி இசைப்பாடகியாகி விட வேண்டும் என்று நானும் கனவு கண்டேன். ஆனால் எதிர்பாராமல் நடிகையாகி விட்டேன். எது நடந்தாலும் நமது நல்லதுக்குத்தான்'' என்றார்.