"நடிகர் விஜய் மட்டுமல்ல, அனைவருக்கும் அரசியலுக்கு வருவதற்கான தகுதி உள்ளது"- இயக்குநர் வெற்றிமாறன்
|நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
லியோ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு நடிகர் விஜய் பேசுகையில், தளபதி என்றால் என்ன அர்த்தம். மக்கள்தான் மன்னர்கள். நான் உங்கள் கீழ் இருக்கும் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன் என தனது அரசியல் பயணத்தை சூசகமாக கூறினார்.
அப்போது தொகுப்பாளர், 2026 என சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் வருடத்தை குறிப்பிட்டு கேள்வியெழுப்புகையில், சில மழுப்பலான பதிலளித்த விஜய், இறுதியில் 'கப்பு முக்கியம் பிகிலு' எனக்கூறி அரங்கையே அதிரவைத்தார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இதுகுறித்து கருத்து கூறுகையில், நடிகர் விஜய் மட்டுமல்ல, அனைவருக்கும் அரசியலுக்கு வருவதற்கான தகுதி உள்ளது என தெரிவித்தார்.
மேலும், நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரலாம் எனக்கூறிய அவர், அதற்கு முன்னதாக கள செயல்பாடுகளில் விஜய் ஈடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.