சர்வதேச இசையமைப்பாளராகும் கதீஜா ரகுமான்
|கதீஜா ரகுமான் 'மின்மினி' படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான். இவர் ஷங்கர் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியான 'எந்திரன்' படத்தில் இடம்பெற்ற 'புதிய மனிதா' என்ற பாடலில் ஒரு சிறிய பகுதியை பாடியிருந்தார். மேலும், சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இடம்பெற்ற 'சின்னஞ்சிறு நிலவே' பாடலையும் கதீஜா பாடியுள்ளார்.
இதையடுத்து ஹலிதா ஷமீம் இயக்கி வரும் 'மின்மினி' படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். கடந்த மாதம் இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில் பிரிட்டன் - இந்தியா நாடுகள் இணைந்து தயாரிக்கும் 'லயனஸ்' படத்திற்கு இசையமைப்பாளராக கதீஜா ஒப்பந்தமாகியுள்ளார். பிரிட்டிஷ் நடிகை பைஜ் சந்து மற்றும் அதிதி ராவ் நடிக்கும் இப்படத்தை பெண் இயக்குனர் கஜ்ரி பாபர் இயக்கவுள்ளார். இப்படத்தை இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும், பிரிட்டனின் பிரிட்டிஷ் திரைப்பட கழகமும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
இந்நிலையில், இந்த படத்தின் போஸ்டர் கோவாவில் நடந்து வரும் 54-வது சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் மூலம் சர்வதேச அளவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் கதீஜா ரஹ்மான்.