நடிகை இலியானாவுக்கு ஆண் குழந்தை - இன்ஸ்டாவில் பகிர்வு
|இலியானா தனக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து உள்ளார்.
தமிழில் 'கேடி' படத்தில் அறிமுகமான இலியானா 'நண்பன்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இலியானா வெளிநாட்டை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்வதாக கிசுகிசுக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
திருமணம் ஆகாத நிலையில் கர்ப்பமாக இருப்பதாக இலியானா தெரிவித்ததும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. கர்ப்பத்துக்கு காரணம் யார் என்று கேள்விகள் எழுப்பி வந்தனர். அதை பொருட்படுத்தாமல் வயிறு பெரிதாகி கர்ப்பிணி தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
சமீபத்தில் கர்ப்பத்துக்கு காரணம் இவர்தான் என்று சொல்லி காதலர் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்தார். தற்போது இலியானா தனக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து உள்ளார்.
இலியானா வெளியிட்டுள்ள பதிவில், ''எங்கள் அன்பு மகனை இந்த உலகத்துக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதை வார்த்தைகளால் விளக்க முடியாது. குழந்தைக்கு கோவா பீனிக்ஸ் டோலன் என்று பெயர் வைத்துள்ளோம்'' என்று குறிப்பிட்டு உள்ளார். இலியானாவுக்கு நடிகர்களும் ரசிகர்களும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.