நாம் ஒன்றை விரும்பினால், அதனை இந்த பிரபஞ்சம் வழங்கும் - நடிகர் அசோக் செல்வன்
|அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நித்தம் ஒரு வானம்'. இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'நித்தம் ஒரு வானம்'. இதில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் மலையாளத்தில் 'ஆகாசம்' என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். அதில் அசோக் செல்வன் பேசியதாவது, ''நித்தம் ஒரு வானம் என்னுடைய திரையுலக பயணத்தில் ஸ்பெஷலான திரைப்படம். இது ஒரு மோட்டிவேஷனல் கதை. இந்தப் படத்தில் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கதை தான் ஏற்படுத்தியது. 'ஓ மை கடவுளே' படம் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல், அதைவிட கூடுதலாக இந்தப் படம் ஏற்படுத்தும்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நான் மட்டுமல்ல ஒட்டுமொத்தப் பட குழுவினருக்கும் அதிசயமான அனுபவம் கிடைத்தது. ரோதங் பாஸ் எனுமிடத்தில் பனி படர்ந்திருக்கும். இந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு, பட குழுவினர் அனைவரும் அங்கு சென்றோம். அங்கு சென்றவுடன், இது பனி விழும் சீசன் இல்லையென்று தெரிய வந்தது. இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரின் முகத்திலும் கவலை ஏற்பட்டது. சென்னையிலிருந்து புறப்பட்டு இவ்வளவு தொலைவு வந்து விட்டோம். இருந்தாலும் படப்பிடிப்பு நடத்துவோம் என்று நடத்தத் தொடங்கினோம். கோடை காலம் போல் வெயில் வெளுத்து வாங்கியது.
எனக்கும், ரிது வர்மாவிற்குமான காட்சிகளைப் படமாக்கத் தொடங்கினோம். சில மணி நேரங்களிலேயே மெதுவாக பனி சாரல் தூறத் தொடங்கியது. 10, 15 நிமிடத்திற்குள் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பனி பொழியத் தொடங்கியது. நாங்கள் எங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து வியந்தோம். உணர்வு மேலிட, இயக்குனரின் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தன. அங்குள்ள மக்கள், 'இந்த சீசனில் பனி பொழிய தொடங்கி பதினெட்டு ஆண்டுகளாகிவிட்டது' என்ற தகவலை எங்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது, நாங்கள் உண்மையில் ஆச்சரியப்பட்டு, அந்த அதிசய அனுபவத்தை உணர்ந்து கொண்டே படப்பிடிப்பை நடத்தினோம். சில தருணங்களில் நாம் ஏதாவது ஒன்றை வேண்டும் என்று விரும்பினால், அதனை இந்த பிரபஞ்சம் வழங்கும் என்பார்கள். அதனை நாங்கள் அந்த தருணத்தில் நிஜமாகவே உணர்ந்தோம்'' என்றார்.
இப்படம் வருகிற நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.