விஜய்சேதுபதி நடிப்பை எட்டுவது என்னால் முடியாது - நடிகர் ஹிருத்திக் ரோஷன்
|புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள படம் விக்ரம் வேதா. இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது.
புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கி வருகின்றனர்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது. விக்ரம் வேதா இந்தி படத்தின் டீசர் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.
இந்த நிலையில், படத்தின் புரொமோஷனில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இதில் ஹிருத்திக் ரோஷன் பேசியதாவது, "விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதி அவரது கதாபாத்திரத்தில் எவ்வளவு அற்புதமாக நடித்திருந்தார் என்பது எனக்குத் தெரியும். அந்த நிலையை எட்டுவது குறித்து என்னால் கனவிலும் நினைக்க முடியாது.
என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன், நான் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ஒரு கதாபாத்திரத்தை அணுகும்போது, அந்தக் கதாபாத்திரம் செய்ததை மீண்டும் நீங்கள் செய்ய முடியாது. ஒவ்வொரு நபரும் வித்தியாசமானவர் என்பதை அறிந்துகொள்வதே அதற்கான எளிய வழி. எனவே, நான் பார்க்கும் விதத்தில் இதை அணுகினேன். அது தானாகவே வித்தியாசமாகவும், புதியதாகவும், நேர்மையாகவும் வந்திருக்கிறது'' என்றார்.