படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிய அருள்நிதி
|அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்துள்ள படம் 'தேஜாவு'. 'தேஜாவு' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி, நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இந்த படத்தில் ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிஸ்டரி திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் அருள்நிதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் தேஜாவு திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வருகிற ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளனர். அதன்படி இப்படம் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.