< Back
சினிமா செய்திகள்
ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சியில் மோதிக்கொண்ட இளைஞர்கள்
சினிமா செய்திகள்

ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சியில் மோதிக்கொண்ட இளைஞர்கள்

தினத்தந்தி
|
9 Sept 2024 4:37 PM IST

கோவையில் ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சியில் இளைஞர்கள் இடையே திடீர் கைகலப்பு ஏற்பட்டது.

கோவை,

தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. திரைத் துறையில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். இவரின் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தனி ஒருவன், ஆம்பள, அரண்மனை உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார்.மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவர் இசையமைத்த, 'டக்கர்' என்ற பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர், 'ரிட்டர்ன் ஆப் தி டிராகன்' என்ற பெயரில் லண்டன், மலேசியா போன்ற வெளிநாடுகளில் வெற்றிகரமாக இசைக் கச்சேரி நடத்தி உள்ளார். இந்த நிலையில் கோவையை சொந்த ஊராக கொண்ட இவர், அங்கு முதல் முறையாக தன் இசைக் கச்சேரியை கொடிசியா மைதானத்தில் நடத்தி உள்ளார்.

கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஹிப் ஹாப் ஆதி பாடல் பாடிக்கொண்டிருந்தபோது இருத்தரப்பு இளைஞர்களிடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அடிதடியில் ஈடுபட்ட இளைஞர்களை அழைத்து சென்றனர்.

தற்போது இளைஞர்கள் அடித்துக் கொண்ட காட்சி வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஹிப் ஹாப் ஆதி இசை நிகழ்ச்சி பாதுகாப்பு குறைபாடுகள் மிகவும் குறைவாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் இதுபோன்ற இசை நிகழ்ச்சியில் அதிகம் கூடும்போது பிரச்னைகள் எழுவதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் இசை நிகழ்ச்சியை போல 300 அடி ரேம்ப் அமைத்து ஹிப் ஹாப் ஆதி அதில் நடந்து வந்து பாட்டு பாடி நடனமாடியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் கூட்டம் அலைமோதியதால் பெரும் குளறுபடி ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்