< Back
சினிமா செய்திகள்
ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை - நடிகர் அஜித்குமாரை விமர்சித்த போஸ் வெங்கட்
சினிமா செய்திகள்

'ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை' - நடிகர் அஜித்குமாரை விமர்சித்த போஸ் வெங்கட்

தினத்தந்தி
|
8 Dec 2023 10:08 AM IST

நடிகர் அஜித்குமாரை கடுமையாக விமர்சித்து போஸ் வெங்கட் பதிவிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

சென்னை,

மிக்ஜம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் இன்னும் முழுமையாக சீர் செய்யப்படாத நிலையில், சென்னையில் பல பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் இருக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். தமிழக அரசின் உத்தரவின்பேரில் பொது மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே காரப்பாக்கத்தில் வசித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதேபோல், பாலிவுட் நடிகர் அமீர் கானும் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து, நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம் தீயணைப்புதுறையினர் மீட்டனர். தங்களை உடனடியாக மீட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட நடிகர்கள் விஷ்ணு விஷால், அமீர் கான் ஆகியோரை நடிகர் அஜித்குமார் நேரில் சென்று நலம் விசாரித்தார். இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில், ஒரு பொதுவான நண்பர் மூலம் எங்கள் நிலைமையை அறிந்த பிறகு, எப்போதும் உதவிக்கரம் நீட்டும் அஜித் சார் எங்களைப் பார்க்க வந்து எங்களுடன் எங்கள் வீட்டில் உள்ள பட குழுவிற்கும் பயண ஏற்பாடுகளில் உதவினார்... லவ் யூ அஜித் சார், என்று பதிவிட்டுருந்தார்.

இதனை விமர்சிக்கும் விதமாக நடிகர் போஸ் வெங்கட் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் அந்த பதிவில் நடிகர் அஜித்குமாரை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், 'வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு.. இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும்.... (உங்களுக்கு நல்ல இணைப்பு உண்டு).. ஆனால் உங்களை விரும்பும்.. டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை.,,(ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்களாம்)' என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்