முதல் படத்திலேயே வில்லனா? அருண் விஜய் படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகர்
|கன்னட நடிகர் யோகி, அருண் விஜய் நடிக்கும் 36 வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவில் தனக்கென வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருண் விஜய். தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார் அருண் விஜய். அந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து அருண் விஜய்யின் 36 வது படம், மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் உருவாக உள்ளது.
இந்த நிலையில், அருண் விஜய் நடிக்கும் 36 வது படத்திற்கான படப்பிடிப்பு பூஜைகள் சமீபத்தில் அமர்க்களமாக நடைபெற்றது. இதில் பிக் பாஸ் பாலாஜி, லோகேஷ் கனகராஜ் மற்றும் வெந்து தணிந்தது காடு படத்தின் நாயகி சித்தி இத்னானி ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், பிரபல கன்னட நடிகர் யோகி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகர் யோகி கூறுகையில், கன்னடத்தில் வெளியான ஹெட் புஷ் படத்தில் நான் நடித்திருந்தேன். அந்த படத்தை பார்த்து அருண் விஜய் படத்தில் நடிப்பது தொடர்பாக பேச என்னை சென்னை அழைத்தார்கள். எனக்கு கதையையும், இயக்குனரையும் மிகவும் பிடித்திருந்தது. இதனால் படத்தில் நடிப்பதாக கூறினேன். விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். என்றார்.
இவர் தமிழில் நடிக்க உள்ள முதல் படம் இதுவாகும். மேலும், இவர் இதில் அருண் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.