இது போன்ற படங்களை தமிழிலும் கொண்டுவர விரும்புகிறேன் - நடிகை குஷ்பு
|நல்ல கதை உள்ள படங்களை பார்க்க பார்வையாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று குஷ்பு கூறினார்.
சென்னை,
நடிகையாகவும் அரசியல்வாதியாகவும் இருப்பவர் குஷ்பு. இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் அரண்மனை 4. சுந்தர்.சி இயக்கி, நடித்திருந்த இந்த படத்தில் தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்தார். இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகை குஷ்பு பேட்டியில் கூறியதாவது, 'டார்லிங்ஸ்', 'பதாய் ஹோ', 'க்ரூ' போன்ற படங்களை தமிழிலும் கொண்டுவர விரும்புகிறேன். ஆனால், இது போன்ற பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு இன்னும் தென்னிந்தியாவில் பார்வையாளர்கள் இல்லை. அதற்கு சிறிதுகாலம் ஆகும்.
இது போன்ற பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஹிட் அடிப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இனிமேல், ஹீரோவை மையமாகக் கொண்ட படங்கள்தான் ஹிட் ஆகும் என்பதில்லை. கதை நன்றாக இருந்தால், பார்வையாளர்கள் விரும்பும் வகையில் படம் எடுக்கப்பட்டால், திரையரங்குகளில் இருந்து நிறைய பணம் கொட்டும். நாயகனாக இருந்தாலும் சரி, கதாநாயகியாக இருந்தாலும் சரி நல்ல கதை உள்ள படங்களை பார்க்க பார்வையாளர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த மாற்றம் நல்லது என்று நினைக்கிறேன். இவ்வாறு கூறினார்.