பெண்கள் தைரியமாக முன்னேற வேண்டும் -நடிகை காஜல் அகர்வால்
|தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். மகளிர் தினத்தையொட்டி காஜல் அகர்வால் கூறும்போது, "பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் துறையில் முன்னேறிச் செல்வதற்காக யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
நமக்குத் தேவையான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. உனக்கு பிடித்த உடைகளை நீ அணிந்து கொள். உனக்குப் பிடித்த மொழியை நீ பேசு. யாருக்கும் பயந்து நீ உன் தன்மானத்தை இழக்க வேண்டாம். உன்னை நீ மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
ஒவ்வொருவரும் பெண்களை கவுரவிக்க வேண்டும். பெண்கள் தைரியமாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும். தைரியம் மூலம்தான் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும்'' என்றார்.
மேலும் காஜல் அகர்வால் கூறும்போது, "குழந்தை பிறந்த மூன்று மாதங்களிலேயே உடலை கட்டுக்கோப்பாக மாற்றி நடிக்க வந்து விட்டீர்களே என்று எல்லாரும் ஆச்சரியமாக என்னிடம் கேட்கிறார்கள். ஒழுக்கமாக இருந்தால் எடையை குறைப்பது பெரிய விஷயம் இல்லை. குதிரை சவாரி, வில் வித்தை, சிலம்பம் போன்ற கலைகளில் கூட நான் பயிற்சி எடுத்துக் கொண்டேன்'' என்றார்.