< Back
சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள்
சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள்

தினத்தந்தி
|
14 July 2023 1:23 PM IST

சினிமாவில் திரைக்கு முன் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் பெண்களுக்கு மத்தியில் திரைக்குப் பின்னால் திறமைக்காட்டி ஜொலிக்கும் பெண்களும் ஏராளம். குறிப்பாக ‘கேப்டன் ஆப் தி ஷிப்' என்று சொல்லப்படும் இயக்குனர் நாற்காலியை ஆண்களுக்கு நிகராக பெண் இயக்குனர்களும் அலங்கரித்து, சினிமாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். அவர்களில் சிலர்:-

சுதா கொங்கரா

திரைக்கதை ஆசிரியராக சினிமா பயணத்தை ஆரம்பித்த சுதா கொங்கரா, 'துரோகி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மாதவனை வைத்து இயக்கிய 'இறுதிச்சுற்று' திருப்புமுனையாக அமைந்தது. சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டார். தற்போது சூரரைப்போற்று' படத்தை இந்தியில் இயக்கி வருகிறார்.

லட்சுமி ராமகிருஷ்ணன்

தமிழில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு கட்டத்தில் தன் கவனத்தை டைரக்ஷன் பக்கம் திருப்பினார். இவர் இயக்கிய 'ஆரோகணம்', சினிமா பார்வையாளர்களிடையே வரவேற்பு பெற்றது. தொடர்ந்து 'நெருங்கி வா முத்தமிடாதே', 'அம்மணி', 'ஹவுஸ் ஓனர்' போன்ற படங்களை இயக்கினார். தற்போது சமுத்திரக்கனி நடிக்கும் 'ஆர் யு ஓகே பேபி' படத்தை இயக்கி வருகிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முதல் படமான '3' படத்திலேயே தன்னுடைய இயக்குனர் திறமையை நிரூபித்தார். 'வை ராஜா வை', 'சினிமா வீரன்' (ஆவணப் படம்) படங்களுக்கு பிறகு தன் தந்தையான ரஜினிகாந்த்தை வைத்து 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார்.

சவுந்தர்யா ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் இளையமகளான சவுந்தர்யா 'படையப்பா', 'சந்திரமுகி', 'சிவாஜி' போன்ற படங்களில் கிராபிக்ஸ் துறையில் பணியாற்றி பின்னர், 'கோச்சடையான்' படத்தை மோஷன் கேப்ச்சர் முறையில் படமாக்கி திரையுலகத்தை திரும்பிப்பார்க்க வைத்தார். தனுசை வைத்து இயக்கிய 'வி.ஐ.பி-2' படத்திலும் தன்னுடைய திறமையை பளிச்சிடச் செய்தார்.

மதுமிதா

`வல்லமை தாராயோ' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். 'கொல கொலையா முந்திரிக்கா', 'மூணே மூணு வார்த்தை' போன்ற படங்களை தொடர்ந்து இவர் இயக்கிய 'கே.டி' படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கிருத்திகா உதயநிதி

அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் டைரக்ஷன் பக்கம் கவனத்தை திருப்பிய கிருத்திகா உதயநிதி, 'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். விஜய் ஆண்டனியை வைத்து இயக்கிய 'காளி' இவரை திறமையான இயக்குனராக அடையாளம் காட்டியது. சமீபத்தில் 'பேப்பர் ராக்கெட்' படத்தை இயக்கி இருந்தார்.

ஹலிதா ஷமீம்

கதையை நம்பி சினிமாவுக்கு வந்தவர் என்ற அடையாளம் ஹலிதா ஷமீமுக்கு உண்டு. முதல் படமான 'பூவரசம் பீப்பீ'யில் குழந்தைகளின் உலகத்தைச் சொன்னவர், 'சில்லுக்கருப்பட்டி', 'ஏலே' போன்ற படங்களில் வாழ்வியலின் யதார்த்தைச் சொல்லியிருந்தார். தற்போது குழந்தைகள் படமான 'மின்மினி' படத்தை இயக்கி வருகிறார்.

அனிதா தீப்

`குளிர் 100 டிகிரி' அனிதா தீப்பின் முதல் படம். அடுத்து இயக்கிய '90 எம் எல்' சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இந்தப் பட்டியலில் இன்னும் சில பெண் இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்பது சினிமாவுக்கு ஆரோக்கியமான செய்தி.

மேலும் செய்திகள்