< Back
சினிமா செய்திகள்
பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தைரியமாக பேசுவது விழிப்புணர்வை ஏற்படுத்தும் - நடிகை பிரியாமணி
சினிமா செய்திகள்

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தைரியமாக பேசுவது விழிப்புணர்வை ஏற்படுத்தும் - நடிகை பிரியாமணி

தினத்தந்தி
|
6 Sept 2024 8:00 PM IST

பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு ஆதாரம் தரமுடியாது என்று நடிகை பிரியாமணி கூறியுள்ளார்.

சென்னை,

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகைகள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பாலியல் தொல்லை அனுபவங்களையும் பகிர்கிறார்கள். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் பிரியாமணியும் இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

இவர் ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் நுழைந்திருந்தாலும் கடந்த 2007ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் என்ற திரைப்படம் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இந்த படத்தில் நடித்ததற்காக பல விருதுகளையும் வென்றுள்ளார். அதைத் தொடர்ந்து மலைக்கோட்டை, ராவணன், சாருலதா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான நேரு திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரியாமணி.

இந்நிலையில் நடிகை பிரியாமணி பாலியல் சீண்டல் குறித்து பேசியுள்ளார். அதாவது மலையாள சினிமாவில் சினிமா வாய்ப்பு தேடி வரும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்று சமீப காலமாக வெளியாகும் தகவல்கள் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி ராதிகா, சிம்ரன் போன்ற நடிகைகள் பாலியல் வன்கொடுமை குறித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை பிரியாமணியிடம் பாலியல் வன்கொடுமை குறித்த கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில், ''மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அமைத்து அறிக்கை வெளியாகி இருப்பது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது. சில நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்கிறார்கள். மலையாளத்தில் கமிட்டி அமைத்ததுபோல தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட பட உலகிலும் கமிட்டிகள் அமைத்தால் நல்லது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டும். திரைத்துறை மட்டுமன்றி எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கின்றன. பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தைரியமாக பேசுவது அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு ஆதாரம் தரமுடியாது. இப்போது கேமரா போன்கள் வந்துள்ளன. ஆனாலும் இப்போது வெளிப்படையாக பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அப்படியே தொடர வேண்டும். எனக்கு இதுபோன்ற கசப்பான அனுபவம் ஏற்படவில்லை. பாலியல் தொல்லையை எதிர்கொண்டவர்களும் என்னிடம் வந்து சொன்னது இல்லை'' எனவும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்