சென்னை
எண்ணூரில் பக்கத்து வீட்டில் திருடிய பெண் கைது
|எண்ணூரில் பக்கத்து வீட்டில் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
எண்ணூர், சிவன் படை வீதியைச் சேர்ந்தவர் கீர்த்தனா. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியையான இவரது வீட்டில் இருந்த 7 பவுன் நகை மாயமானது. வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்படாத நிலையில் நகை மாயமானதால் இதுபற்றி எண்ணூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவரான, அழகுநிலையத்தில் வேலை பார்த்து வரும் ஜான்சிராணி (வயது 34) என்பவர் திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்தனர்.
ஜான்சிராணி, கீர்த்தனா வீட்டு மாடியில் வசிக்கும் அவரது சகோதரியை பார்க்க வந்தபோது, பூட்டி கிடந்த கீர்த்தனா வீட்டின் கதவை அருகில் வைத்து இருந்த சாவியை கொண்டு திறந்து நகையை திருடியது தெரிந்தது. ஏற்கனவே அவர், அருகில் வசிக்கும் பால்ராஜ் என்பவரது வீட்டிலும் 28 பவுன் நகை திருடியதும், அப்போது கண்காணிப்பு கேமரா இல்லாததால் போலீசில் சிக்காமல் தப்பியதும் தெரிந்தது.