< Back
சினிமா செய்திகள்
குடும்ப பாங்காக நடிக்க விருப்பம் - நடிகை சம்யுக்தா
சினிமா செய்திகள்

குடும்ப பாங்காக நடிக்க விருப்பம் - நடிகை சம்யுக்தா

தினத்தந்தி
|
12 May 2023 9:17 AM IST

தமிழில் `களரி', `ஜூலை காற்றில்' படங்களில் வந்த சம்யுக்தா மேனனுக்கு தனுஷ் ஜோடியாக நடித்த `வாத்தி' திருப்புமுனையாக அமைந்தது. தற்போது இரு மொழிகளிலும் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் விருபாக்ஷா படத்திலும் நாயகியாக நடித்து பெயர் வாங்கி இருக்கிறார். மலையாள, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவரது பேட்டி விவரம்:-

சினிமா நடிகை ஆனது எப்படி?

பிளஸ்-2 முடித்த பிறகு டாக்டருக்கு படிக்க தயாரானபோது, நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த சமயத்தில் சினிமா மீது எந்தவித புரிதலும் இல்லை. ஏதோ வாய்ப்பு வந்ததே என்று நடித்தேன். ஒரு நல்ல படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலக நினைத்தேன். ஆனால் என்னை அறியாமலே சினிமா மீது இஷ்டம் ஏற்பட்டுவிட்டது.

உங்கள் அபிமான நடிகர் யார்?

லியானார்டோ டிகாப்ரியோவிற்கு நான் தீவிர ரசிகை. டைட்டானிக் படம் பார்த்தது முதல், நான் அவருக்கு பெரிய ரசிகை ஆகிவிட்டேன். அதேபோல நடிகர் தனுஷ் நடிப்பு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் பத்தாம் வகுப்பு படித்தபோது பஸ்ஸில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் பாடல்களை போட்டு டான்ஸ் ஆடினேன்.. அவருக்கு ஜோடியாக நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

நீங்கள் ரோல் மாடலாக யாரை நினைக்கிறீர்கள்?

நடிகை சமந்தாவைத்தான். அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். சமந்தா மாதிரி இருக்கிறாய் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். ஆனால் நீ சமந்தா மாதிரி நடிக்கிறாய் என்று சொன்னால் சந்தோஷப்படுவேன். அவர் மிகச்சிறந்த நடிகை. அவரது நடிப்போடு என்னை ஒப்பிட்டு பேசினால் அதிகமாக மகிழ்வேன்.

கோபத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியாதாமே?

சிலரது நடவடிக்கை மிகுந்த கோபத்தை ஏற்படுத்தும். நானும் என் அம்மாவும் ஒரு முறை வெளியே சென்றோம். ஒருவர் சிகரெட்டை பிடித்து அந்தப் புகையை எங்கள் மீது விட்டுக் கொண்டிருந்தார். எனக்கு கோபம் வந்துவிட்டது. அதனால் அவர் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டேன்.

உங்களுக்கு பிடித்தமான மற்ற விஷயங்களைப் பற்றி...

பயணங்கள் செய்வது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். முக்கியமாக தனியாக செல்வதற்கு அதிகம் விரும்புவேன். இமயமலைக்கு அதிகமாக செல்வேன். ஓய்வு நேரங்களில் கவிதைகள் எழுதுவேன்.

சம்யுக்தா மேனன் என்ற பெயரை சம்யுக்தா என்று சுருக்கி கொண்டது ஏன்?

என் சிறு வயதிலேயே பெற்றோர் பிரிந்து விட்டார்கள். அதனால் என் குடும்பப் பெயரை என் பெயரில் இருந்து நீக்கி விட்டேன்.

மேலும் செய்திகள்