'இந்தியன் 2' படத்தில் விவேக் நடித்த காட்சிகள் நீக்கமா?
|கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படப்பிடிப்பை தொடங்கியபோது நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க விவேக்கை ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஏற்கனவே ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து இருந்த விவேக் ஒரு படத்திலாவது கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்று பொது மேடைகளில் தொடர்ந்து பேசி வந்தார்.
அவரது கனவு 'இந்தியன் 2' படத்தில் நிறைவேறியது. படப்பிடிப்பை தொடங்கியபோது விவேக்கும் கமலுடன் சேர்ந்து சில நாட்கள் நடித்தார். அதன்பிறகு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்ததால் படவேலைகள் நிறுத்தப்பட்டன. விவேக்கும் 2021-ல் மரணம் அடைந்தார். இது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது 'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ள நிலையில் விவேக் நடித்த காட்சிகள் நீக்கப்படலாம் என்றும் அவருக்கு பதில் வேறு நகைச்சுவை நடிகர் நடிப்பார் என்றும் பேசப்பட்டது. இந்த நிலையில் விவேக் நடித்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்கும் முடிவை ஷங்கர் கைவிட்டு இருப்பதாகவும் விவேக் காட்சிகளை அப்படியே படத்தில் வைக்க முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.
இதையடுத்து விவேக்குக்கு டப்பிங் பேசுவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.