விலா எலும்பு காயத்தால் சல்மான் கான் அவதி - சிக்கந்தர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குமா?
|நடிகர் சல்மான் கான் விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக மிகவும் அவதிப்படுகிறார்.
மும்பை,
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்துக்கு 'சிக்கந்தர்' என்று 'பெயர் ' வைக்கப்பட்டுள்ளது.
இது "புராணக் கதை' படமாகும். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், நடிகர் சல்மான் கான் விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சல்மான் அசவுகரியமாக காணப்பட்டார். பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே சல்மான் கான் அருகே வந்தபோது, அவரிடம் பேசுவதற்காக சல்மான் எழுந்து நிற்க முயற்சி செய்தார். அப்போது அவரால் உடனடியாக எழுந்து நிற்க முடியவில்லை. சல்மான் கான் மெதுவாக எழுந்து நிற்பதை கண்ட ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகின்றன.
அதில் இருந்து அவர் விரைவில் குணம் அடைந்து வர வேண்டும் எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சல்மான் கானின் உடல்நிலை சரியானதும் வருகிற நவம்பர் மாதத்தில் 'சிக்கந்தர்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.