பையா 2-ம் பாகத்தில் கார்த்தி நடிப்பாரா?
|லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து 2010-ல் திரைக்கு வந்த படம் பையா. இதில் தமன்னா கதாநாயகியாக நடித்து இருந்தார். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பையா படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. கார்த்திக்கு திருப்புமுனை படமாகவும் அமைந்தது.
படத்தில் இடம்பெற்ற துளி துளியென மழையாய் வந்தாளே, அடடா மழைடா அட மழைடா, என் காதல் சொல்ல உள்ளிட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. இந்த நிலையில் பையா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக லிங்குசாமி சமீபத்தில் அறிவித்தார்.
இதில் ஆர்யா கதாநாயகனாகவும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நாயகியாகவும் நடிக்க இருப்பதாதாக தகவல்கள் பரவின. ஆனால் பையா 2 படத்தில் ஜான்வி கபூர் நடிக்கவில்லை என்று அவரது தந்தை போனிகபூர் மறுத்தார்.
இந்த நிலையில் பையா 2-ம் பாகத்திலும் கார்த்தியையே நடிக்க வைக்க அவரிடம் படக்குழுவினர் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். இதில் கார்த்தி நடிப்பது உறுதியானால், தமன்னாவும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.