நடிகை சுகன்யாவுக்கு 50 வயதில் மறுமணமா? அவரே அளித்த பதில்
|தமிழில் புது நெல்லு புது நாத்து படம் மூலம் கடந்த 1991-ம் ஆண்டு அறிமுகமான சுகன்யா, திறமையான நடிப்பால் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். சின்ன கவுண்டர், இந்தியன், வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
2002-ல் ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார். பின்னர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தார். இந்த நிலையில் சுகன்யா மறுமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவியது.
இதுகுறித்து சுகன்யா கூறும்போது, ''கணவருடனான திருமண பந்தம் சரியாக பொருந்தவில்லை எனில் பெண்கள் அதில் இருந்து விலகிவிடுவது நல்லது. இந்த சமூகத்துக்கு கட்டுப்பட்டு எல்லாவற்றையும் சகித்து போவதால் பல தற்கொலைகள் அரங்கேறி இருக்கின்றன.
சமூகத்தை எதிர்க்க துணிவு இருந்தால் நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கோரலாம். என் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது. நான் விண்ணப்பித்து பல ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது சமீபத்தில் தான் எனக்கு விவாகரத்து கிடைத்தது.
மறுமணம் என்ற எண்ணம் இதுவரைக்கும் எனக்கு வந்தது இல்லை. அதற்காக மறுமணம் செய்துகொள்ள மாட்டேன் என்றும் சொல்லவில்லை. இன்னும் 2 மாதங்களில் 50 வயதை எட்டிவிடுவேன்.
இதற்கு பிறகு திருமணம் செய்து, குழந்தை பிறந்தால் அந்த குழந்தை என்னை அம்மா என்று கூப்பிடுமா? அல்லது பாட்டி என்று கூப்பிடுமா? என்று குழப்பமாக இருக்கிறது. இது சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயம் என்றாலும், நடைமுறையில் சில விஷயங்களை எண்ணி பார்க்கத்தான் வேண்டியதுள்ளது.
வாழ்வில் நமக்கு அனைத்து நிலைகளிலும் ஒரு துணை வேண்டும். எனவே மறுமணம் செய்வேனா? இல்லையா? என்பதை என்னால் சொல்லமுடியாது. என் வாழ்வில் என்ன நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறதோ, அது நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன். அவ்வளவுதான்''என்றார்.