கொலை வழக்கில் சிக்கிய நடிகர் தர்ஷனை விட்டு விலகும் மனைவி விஜயலட்சுமி?
|மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நடிகர் தர்ஷனை, விஜயலட்சுமி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பெங்களூரு,
கொலை வழக்கில் சிக்கிய நடிகர் தர்ஷனை விட்டு அவரது மனைவி விஜயலட்சுமி விலகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சேலஞ்சிங் ஸ்டாரின் வாழ்க்கை சேலஞ்ச் ஆகிவருகிறது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தர்ஷன். ரசிகர்களால் செல்லமாக தி பாஸ், சேலஞ்சிங் ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார். இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும், மகனும் உள்ளனர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நடிகர் தர்ஷனை, விஜயலட்சுமி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு முன்பு தர்ஷன் வேலை இல்லாமல் பொருளாதாரம் ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். அவருக்கு விஜயலட்சுமி தான் உதவி செய்து வந்துள்ளார்.
மேலும் தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்கிய விஜயலட்சுமி, தனது கணவரின் நடிப்பு ஆசையை நிறைவேற்றவும் பக்கபலமாக இருந்துள்ளார். முன்பே திரைத்துறையில் இருந்தாலும் விஜயலட்சுமியை திருமணம் செய்த பிறகே நடிகர் தர்ஷன் திரையுலகில் தொடர் வெற்றிகளை கொடுத்து உச்சநிலைக்கு வந்துள்ளார்.
இதற்கிடையே நடிகை பவித்ரா கவுடாவுடன் கூடா நட்பு தர்ஷனுக்கு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த விஜயலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கேள்வி கேட்ட அவரை, தர்ஷன் தாக்கியதாகவும், அதையடுத்து விஜயலட்சுமி விவாகரத்து செய்யவும் முடிவு செய்தார். ஆனால் உறவினர்கள், குடும்பத்தினரின் அறிவுரையை ஏற்று இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு பவித்ரா கவுடா தனது சமூக வலைதள பக்கத்தில், நடிகர் தர்ஷனுடன் தான் இருக்கும் படத்தை பதிவிட்டு, நாங்கள்வாழ்க்கையில் இணைந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறியிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி கொதித்து எழுந்தார். இன்னொருவரின் கணவரை அபகரிக்க துடிப்பது சட்டவிரோதம். இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என நடிகை பவித்ரா கவுடாவுக்கு எதிராக விஜயலட்சுமி ஆவேசத்தை வெளிப்படுத்தினார்.
இவ்வாறு நடிகர் தர்ஷன்- விஜயலட்சுமி வாழ்க்கையில் அவ்வப்போது புயலை கிளப்பி வந்த நடிகை பவித்ரா கவுடா, தற்போது தனக்கு தொல்லை கொடுத்த ரசிகரை கொலை செய்ய வைத்து நடிகர் தர்ஷனை போலீசில் வலையில் சிக்க வைத்ததுடன், தானும் சிக்கிக்கொண்டார்.
பவித்ரா கவுடாவுக்காக தனது கணவர் தர்ஷன், கொலை செய்யும் அளவுக்கு சென்று விட்டாரே என கருதி மன வேதனை அடைந்த விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷனுடன் இருந்த படங்கள் அனைத்தையும் நீக்கி விட்டார்.
அதில் இருந்த முகப்பு படத்தையும் நேற்று முன்தினம் நீக்கினார். அத்துடன் நடிகர் தர்ஷனை அன் பாலோ செய்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று விஜயலட்சுமி, தனது இன்ஸ்டாகிராம் கணக்கை பின்தொடர்ந்த தர்ஷனின் ரசிகர்கள் அனைவரையும் அன் பாலோவ் செய்துவிட்டார்.
இதன் மூலம் கொலை வழக்கில் சிக்கிய நடிகர் தர்ஷனை விட்டு விஜயலட்சுமி விலகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது தனது கணவர் கைதாகி இருந்தாலும், அவரை ஜாமீனில் எடுக்கவோ, அதுபற்றி வக்கீலுடன் ஆலோசிக்கவோ விஜயலட்சுமி முன்வரவில்லை. அதே நேரத்தில் நடிகர் தர்ஷனை விவாகரத்து செய்யவும் விஜயலட்சுமி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுதொடர்பாக விஜயலட்சுமி நேரடியாக இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களால் சேலஞ்சிங் ஸ்டார் என அழைக்கப்பட்டு வந்த நடிகர் தர்ஷன் நன்றாக இருக்க வேண்டும் என கருதி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ரசிகரை கொலை செய்த வழக்கில் போலீசில் சிக்கியதன் மூலம் அவரது வாழ்க்கை சேலஞ்ச் (சவால்) ஆகிபோனது என்றால் மிகையல்ல...!