'அந்த படத்தில் நடித்தது என் வாழ்வில் எடுத்த மிக மோசமான முடிவு' - நயன்தாரா
|ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘கஜினி’.
சென்னை,
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, அசின், நயன்தாரா உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான படம் 'கஜினி'. சமீபத்தில் இந்தப் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தில் நடித்தது குறித்து நடிகை நயன்தாரா முன்னதாக அளித்த பேட்டியில் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், "'கஜினி' படத்தில் நான் நடித்தது என் வாழ்க்கையின் நான் எடுத்த மிக மோசமான முடிவு. என்னுடைய கதாபாத்திரம் எனக்குச் சொல்லப்பட்ட விதத்தில் படத்தில் அமையவில்லை.
சில இடங்களில் நான் மோசமாக சித்தரிக்கப்பட்டேன். ஆனால், இது பற்றி நான் புகார் செய்ய விரும்பவில்லை. ஏனெனில், இதனை என் வாழ்வில் ஒரு அனுபவமாக கருதுகிறேன்" என்று பேசியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஏ.ஆர்.முருகதாஸ், 'எனக்கு ஒரு நபரை பிடிக்கும் அல்லது பிடிக்காது என்பதற்காக, படத்தில் ஒரு பாத்திரத்தை குறைக்கவோ அல்லது மிகைப்படுத்தவோ முடியாது. சில சமயங்களில் நமக்குப் பிடிக்காத நடிகர்களுக்கு நல்ல கதாபாத்திரங்களைக் கொடுத்திருப்போம். பிடித்தவர்களுக்கு சிறிய கதாபாத்திரம் கிடைத்திருக்கலாம். அது நம் கையில் இல்லை' என்று கூறியிருந்தார்.