வில்லனாக நடிக்க சம்மதித்தது ஏன்? கமல்ஹாசன் விளக்கம்
|‘கல்கி 2989 ஏ.டி' படத்தில் பிரபாசுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார்
நடிகர் கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் தயாராகும் 'கல்கி 2989 ஏ.டி' படத்தில் பிரபாசுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். இதில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.
கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், "கல்கி படத்தில் வில்லனாக நடிக்கிறேன். இதில் கதாநாயகனுக்கு எவ்வளவு முக்கியம் இருக்குமோ அந்த அளவுக்கு வில்லன் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும். 'கல்கி' படத்தில் நான் நடிக்கிறேன் என்றதும் யாரும் நம்பவில்லை.
சான் டியாகோ காமி நிகழ்ச்சிக்கு நான் சென்றபோது பிரபாஸ் எனது இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு நன்றி சார். நீங்கள் எங்கள் படத்தில் நடிக்கிறீர்கள் என்பதை இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை. படக்குழுவினர் உங்களை எப்படி சம்மதிக்க வைத்தார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.
சில ஆயிரம் ஆண்டுகளாக நாம் புராணங்களை பின்பற்றி வருகிறோம். அந்த புராணங்களின் பெருமையை பறை சாற்றுவதற்காகவே நாக் அஸ்வின் இந்த படத்தை எடுக்கிறார். நானும் இதில் சந்தோசமாக நடிக்க இருக்கிறேன். ஒரு படத்துக்கு ஹீரோ எவ்வளவு முக்கியமோ, வில்லனும் அந்த அளவுக்கு முக்கியம். அதனால்தான் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டேன்'' என்றார்.