ஐரா கானை கரம் பிடிக்க 8 கி.மீ. ஓடி வந்தது ஏன்...? நடிகர் அமீர் கானின் மருமகன் விளக்கம்
|இத்தாலியில் அயர்ன்மேன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நுபுர், தன்னுடைய காதலை ஐராவிடம் வெளிப்படுத்தினார்.
புனே,
பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர் கானின் மகள் ஐரா கானுக்கும், நுபுர் ஷிகாரேவுக்கும் இடையேயான திருமண பதிவு கடந்த 3-ந்தேதி நடந்தது. இதில், பல ஆச்சரியமளிக்கும் விசயங்கள் நடந்தன. இதில் தொழிலதிபரான முகேஷ் அம்பானி, அவருடைய மனைவி நீட்டா அம்பானியுடன் சிறப்பு விருந்தினராக வந்து கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில், நெருங்கிய உறவினர்களே கலந்து கொண்டனர். அந்த வகையில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த, முன்னாள் மனைவியான கிரண் ராவின் கன்னத்தில் முத்தமிட்டு அமீர் கான் தனது அன்பை வெளிப்படுத்தினார்.
நடிகர் அமீர் கான் மற்றும் ரீனா தத்தா முன்னிலையில், மணமக்கள் இருவரும் திருமண ஆவணங்களில் கையெழுத்திட்டனர். அப்போது பாரம்பரிய உடையை அணிந்தபடி ஐரா கானும், நுபுர் கருப்பு வர்ண மேலாடை மற்றும் வெள்ளை நிற டிரவுசரும் அணிந்திருந்தது நிகழ்ச்சியில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
புதுமண தம்பதி கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து புகைப்படங்களுக்கு காட்சி அளித்தனர். அப்போது, ஐரா கான் பாரம்பரிய உடையான லெஹங்கா அணிவதற்கு பதிலாக, ஸ்டைலிஷாக மற்றும் வழக்கத்தில் இல்லாத வகையில் ஹாரெம் வகை பேண்ட் (கால் சட்டை) அணிந்து வந்து ஆச்சரியப்படுத்தினார்.
இந்த தம்பதியின் திருமண கொண்டாட்டங்கள் உதய்ப்பூரில் இந்த வாரம் நடைபெற உள்ளன. ஐரா கானும், நுபுர் ஷிகாரேவும் நீண்ட கால காதலர்கள் ஆவர். இத்தாலியில் அயர்ன்மேன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நுபுர், தன்னுடைய காதலை ஐராவிடம் வெளிப்படுத்தினார். அது முதற்கொண்டு இந்த ஜோடி பற்றி பரவலான தகவல்கள் வெளிவந்தன. இருவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
உடற்பயிற்சி (பிட்னஸ்) மேற்கொள்வதற்கான பயிற்சிகளை வழங்கும் பணியில் நுபுர் ஈடுபட்டு வருகிறார். நடிகர் அமீர் கான், நடிகை சுஷ்மிதா சென் மற்றும் பிற பிரபலங்களுக்கும் அவர் பயிற்சி அளித்திருக்கிறார். ஐரா கான் மனநல ஆதரவு அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.
சமீபத்தில் நடந்த திருமணம் பதிவு செய்யும் நிகழ்ச்சிக்கு கார் அல்லது பாரம்பரிய முறையில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், மணமகன் நுபுர் வரவில்லை.
அதற்கு பதிலாக, 8 கி.மீ. தொலைவுக்கு ஓடியபடியே (ஜாகிங்) திருமண விழாவுக்கு நுபுர் வந்து சேர்ந்திருக்கிறார். வந்ததும் மேடையில் இருந்த நடிகர் அமீர் கான் மற்றும் ஐரா கானை கட்டி தழுவி கொண்டார். பின்னர் ஐரா மற்றும் நுபுர் திருமண உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
பனியன், டிரவுசருடன் இருந்த நுபுர் அந்த உடையுடனேயே ஐராவுடன் சேர்ந்து திருமண ஆவணத்தில் கையெழுத்திட்டார். இதுபற்றி முதன்முறையாக அவரே விளக்கம் அளித்திருக்கிறார்.
நுபுர் அவருடைய இன்ஸ்டாகிராமில் பேசும்போது, என்னுடைய வீட்டில் இருந்து ஐராவின் வீடு வரை நான் ஓடுவது வழக்கம். இந்த வழியுடன், எனக்கென்று ஒரு சிறந்த தொடர்பு உள்ளது. உணர்ச்சிப்பூர்வ காரணம் உள்ளது என்று தெரிவித்து இருக்கிறார்.
இந்த தம்பதியின் திருமண கொண்டாட்டங்கள் இன்று காலை 11.30 மணியளவில் மெகந்தியுடன் தொடங்கியது. இதன்பின்னர், தேநீர் மற்றும் இரவு விருந்து நடைபெறும். இரவு 10 மணியளவில், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருந்து கொடுக்க திட்டமிட்டு உள்ளனர்.
நாளை இரவு 7 மணியளவில், இசை கச்சேரி நடைபெறும். இதன்பின்னர், வருகிற 10-ந்தேதி மாலை 4 மணியளவில் அவர்களுடைய திருமணம் நடைபெறும்.
இந்த தம்பதியின் குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்காக 176 ஓட்டல் அறைகள் வரை முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. திருமணத்தில் 250 பேர் கலந்து கொள்ள கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.