'தி கோட்' படத்தில் 'டீ ஏஜிங்' ஏன்? - பகிர்ந்த வெங்கட்பிரபு
|தி கோட் படத்தில் டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது ஏன்? என்பது குறித்து வெங்கட்பிரபு விளக்கமளித்துள்ளார்.
சென்னை,
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் படம் 'தி கோட்'. இப்படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் வயதை குறைத்து காட்டுவதற்காக டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் கடந்த மாதம் வெளியானது. அதன் பிறகு வெங்கட் பிரபு ஏன் 'டீ ஏஜிங்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார் என்பதைப் அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
இந்நிலையில், அதற்கு வெங்கட்பிரபு தற்போது விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
வில் ஸ்மித்தின் 'ஜெமினி மேன்' படத்தைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்டேன். இந்தத் தொழில்நுட்பத்தை தமிழ் படத்தில் பயன்படுத்தி 50 வயது நபரை 20 வயது இளைஞனாக காட்டினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.
இயக்குனர் அட்லீயும், ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தில் இதை முயற்சி செய்திருந்தார். தி கோட் படத்தில் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடிக்க நான் விரும்பியதால், 'டீ ஏஜிங்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தினேன்,' என்றார்.