இந்தியில் நடிக்காதது ஏன்? அனுஷ்கா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
|சிங்கம் இந்தி ரீமேக்கில் சம்பள விஷயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த படத்தில் நான் நடிக்க முடியாமல் போனது. இந்தியில் இருந்து நல்ல வாய்ப்புகள் வரும் என்று இப்போதும் நம்பிக்கையோடு காத்து இருக்கிறேன் என்கிறார் அனுஷ்கா.
தென்னிந்திய திரையுலகில் சில ஆண்டுகள் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர் அனுஷ்கா. தமிழ், தெலுங்கில் அத்தனை பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருக்கிறார். பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகையாகவும் உயர்ந்தார். பிராந்திய மொழி படங்களில் நீண்ட காலம் நடித்து வந்த அனுஷ்கா இந்தியில் மட்டும் இதுவரை நடிக்கவில்லை.
இதற்கான சுவாரஸ்யமான காரணத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து அனுஷ்கா அளித்துள்ள பேட்டியில், "சூர்யாவும், நானும் தமிழில் நடித்த சிங்கம் படத்தை அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்தார்கள். அஜய்தேவ்கன் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் நடிக்க காஜல் அகர்வாலுக்கு முன்பு என்னைத்தான் அணுகினார்கள்.
சம்பள விஷயத்தில் ஏற்பட்ட சிறிய பிரச்சினை காரணமாக அந்த படத்தில் நான் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு வந்த இந்தி பட வாய்ப்புகள் எனது இமேஜுக்கு தகுந்தவையாக இல்லாமல் இருந்ததால் விட்டு விட்டேன். இந்தியில் இருந்து நல்ல வாய்ப்புகள் வரும் என்று இப்போதும் நம்பிக்கையோடு காத்து இருக்கிறேன்'' என்றார்.