< Back
சினிமா செய்திகள்
படவிழாவில் பங்கேற்க நான் மறுப்பது ஏன்? நடிகை நயன்தாரா விளக்கம்
சினிமா செய்திகள்

படவிழாவில் பங்கேற்க நான் மறுப்பது ஏன்? நடிகை நயன்தாரா விளக்கம்

தினத்தந்தி
|
22 Dec 2022 9:02 AM IST

படவிழாவில் பங்கேற்க நான் மறுப்பது ஏன்? என்று நடிகை நயன்தாரா நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

நயன்தாரா பட விழாக்களுக்கு வருவது இல்லை என்ற விமர்சனங்கள் உள்ளன. குறிப்பாக அவர் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுக்கிறார் என்றும் தயாரிப்பாளர்கள் குறை சொல்கிறார்கள்.

இந்த நிலையில் நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் இதற்கு நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "நான் ஆரம்பத்தில் நடித்த படங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் இல்லாத படங்களாகவே வந்தன. கதாநாயகிகளுக்கு படங்களில் ஏன் முக்கியத்துவம் அளிப்பது இல்லை என்று அப்போது நினைப்பது உண்டு.

அந்த சமயத்தில் பாடல் வெளியீட்டு விழாக்களுக்கு சென்றாலும் நடிகைக்கு மரியாதை இருக்காது. சினிமாவில் நடிகைகளையும் சமமாக நடத்த வேண்டும் என்று விரும்பினேன். அதனால் பட விழாக்களுக்கு செல்வதை தவிர்த்தேன். சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்த பிறகு பட விழாக்களில் பங்கேற்கலாம் என்று இருந்தேன். ஆனால் அதை பின்பற்ற முடியவில்லை.

இப்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைய படங்கள் வருகின்றன. தயாரிப்பாளர்களும் கதாநாயகிகளை மையமாக வைத்து படம் எடுக்க முன்வருகிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது'' என்றார்.

முன்னதாக தியாகராய நகரில் உள்ள தியேட்டரில் தான் நடித்துள்ள கனெக்ட் படத்தின் சிறப்பு காட்சிக்கு வந்த நயன்தாரா அங்கு திரண்ட ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.

மேலும் செய்திகள்