< Back
சினிமா செய்திகள்
பொங்கல் ரேஸில் வென்ற ஆட்டநாயகன் யார்...? விஜய்யா? அஜித்தா?
சினிமா செய்திகள்

பொங்கல் ரேஸில் வென்ற ஆட்டநாயகன் யார்...? விஜய்யா? அஜித்தா?

தினத்தந்தி
|
11 Jan 2023 3:30 PM IST

துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களுக்குமே கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கிறது.

சென்னை

தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதமாகவே அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் என்றால் அது துணிவு மற்றும் வாரிசு தான். இதில் அஜித் நாயகனாக நடித்துள்ள துணிவு எச்.வினோத்தும், விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் வாரிசு படத்தை வம்சியும் இயக்கி இருந்தனர்.

இந்த ஒருபடங்களை தயாரித்ததும் வேறுமாநில தயாரிப்பாளர்கள் தான். துணிவு படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரும், வாரிசு படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜுவும் தயாரித்து இருந்தனர்.

துணிவு படத்துக்கு இசையமைத்துள்ள ஜிப்ரான் முதன்முறையாக அஜித்துடன் இணைந்து பணியாற்றி உள்ளார். அதேபோல் வாரிசு படத்துக்கு இசையமைத்துள்ள தமனும் விஜய் உடன் பணியாற்றியுள்ளது இதுவே முதன்முறை. இந்த இரண்டு படங்களின் டிரைலரும் கலவையான விமர்சனங்களையே பெற்று இருந்தது.

துணிவு டிரைலரை பார்க்கும் போது பீஸ்ட் படம் போல் உள்ளதாகவும், வாரிசு டிரைலரை பார்க்கும் போது சீரியல் போல இருப்பதாவும் விமர்சனம் செய்யப்பட்டன.

துணிவு திரைப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தின் முதல் பாதி அஜித் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் பக்கா மாஸாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளதோடு, படத்தில் முக்கியமான சமூக கருத்தும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டு ஒரு குழு உள்ளே நுழைகிறது. இதனிடையே முன்கூட்டியே வங்கியை கொள்ளையடிக்க திட்டமிட்டு அஜித்தின் குழு உள்ளே நுழைந்திருக்கிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த குழு, அஜித்தை எதிர்க்கிறது. ஒருக்கட்டத்தில் திட்டம் என்னுடையது என்று அஜித் கூறினாலும் கொள்ளையடிக்கும் பணத்தை பிரித்துக் கொள்வதில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இரு குழுவும் கொள்ளை முயற்சியில் ஈடுபடுகிறது.

அஜித்தின் திட்டத்தை நிறைவேற்ற மஞ்சு வாரியர் அவருக்கு வெளியில் இருந்து உதவுகிறார். மறுபுறம் இந்த கொள்ளையை தடுத்து கொள்ளையர்களை பிடிக்க சமுத்திரக்கனி தலைமையில் காவல்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அஜித்தின் திட்டப்படி கொள்ளை வெற்றிகரமாக முடிந்ததா? கொள்ளையடிக்க மேற்கொள்ளும் திட்டங்கள் என்ன? கொள்ளையர்களை காவலர்கள் பிடித்தார்களா? எதற்காக இந்த கொள்ளை முயற்சி நடைபெற்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் வங்கிகள் கிரெடிட் கார்டு மியூச்சுவல் பண்ட், பெர்சனல் லோன் என்ற பெயரில் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று இப்படம் பேசுகிறது.மேலும் தனியார் வங்கிகளில் கட்டண கொள்ளை குறித்தும் விரிவாக அலசுகிறது.

குறிப்பாக எச்.வினோத்தின் வசனங்கள் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜித் மிகவும் ஸ்டைலிஷாக இருப்பதாகவும் இப்படத்திற்கு அடுக்கடுக்கான பாசிடிவ் விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன.

வாரிசு திரைப்படம் குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கமர்ஷியல் திரைப்படம். இப்படம் ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்த நிறைவான படமாக எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

சரத்குமார் மிகப்பெரிய தொழிலதிபர். இவருக்கு ஶ்ரீகாந்த், ஷாம், விஜய் என மூன்று மகன்கள். தன்னை போலவே மூன்று மகன்களும் தொழிலதிபராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். மேலும், குடும்பத்தையும் தொழிலையும் கவனிக்க மூன்று மகன்களில் ஒருவரை போட்டி வைத்து வாரிசாக அறிவிக்க நினைக்கிறார். இது பிடிக்காத விஜய், தந்தை சரத்குமாருடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.

7 ஆண்டுகள் கடந்து செல்கிறது. சரத்குமாருக்கு 60-வது திருமணத்திற்கு ஏற்பாடு நடக்கிறது. தாயின் கட்டாயத்தின் பெயரில் மீண்டும் வீட்டுக்கு வருகிறார் விஜய். வீட்டிற்கு வந்த பிறகு குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு அண்ணன்கள் ஶ்ரீகாந்த், ஷாம், இருவரும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். தன்னுடைய வாரிசாக விஜய்யை அறிவிக்கிறார் சரத்குமார். இதனால், அண்ணன்கள் இருவரும் விஜய்க்கு எதிராக திரும்புகிறார்கள்.

இறுதியில் பிரிந்த குடும்பத்தை விஜய் ஒன்று சேர்த்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

விஜய்யின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாகவும், யோகிபாபுவின் காமெடியும் ஒர்க் அவுட் ஆகி உள்ளதால் இது குடும்பங்கள் கொண்டாடும் படமாக நிச்சயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமனின் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்து உள்ளதாக வாரிசு படத்துக்கும் பாசிடிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

மொத்தத்தில் இரண்டு படங்களுக்குமே கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கிறது. இரண்டு படங்களும் வழக்கம் போல தங்கள் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. பொங்கல் விடுமுறை ஒருவாரம் இருப்பதால் இரண்டு படங்களுக்குமே நல்ல வசூல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் வசூலில் பார்த்தால் இரண்டு படங்களுமே பொங்கல் வின்னர்தான்.

மேலும் செய்திகள்