ரஜினியின் 2 படங்களை இயக்குவது யார்?
|ரஜினிகாந்தை வைத்து லைகா பட நிறுவனம் 2 புதிய படங்களை தயாரிக்கிறது. ஒரு படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவது உறுதியாகி உள்ள நிலையில் 2-வது இயக்குனர் யார் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. டிசம்பர் மாதம் இறுதிக்குள் முழு படப்பிடிப்பையும் முடித்து அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் லைகா பட நிறுவனம் தயாரிக்கும் 2 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 2 படங்களின் டைரக்டர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் ஒரு படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவது உறுதியாகி உள்ளது. இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தை டைரக்டு செய்து இருந்தார்.
இன்னொரு படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா, மணிரத்னம், ஷங்கர் ஆகியோரில் ஒருவர் இயக்க வாய்ப்பு இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார். ஷங்கர் இயக்குவதாக இருந்தால் அது சிவாஜி படத்தின் இரண்டாம் பாகமா? எந்திரன் படத்தின் மூன்றாம் பாகமாக இருக்குமா? அல்லது சரித்திர கதையா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 2-வது இயக்குனர் யார் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளனர்.