அயலான் படத்தில் ஏலியனுக்கு குரல் கொடுத்தது யார்..? ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த படக்குழு
|டீசரை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தில் வரும் ஏலியனுக்கு குரல் கொடுத்தது யார் என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர்.
சென்னை,
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்நிலையில் டீசரை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தில் வரும் ஏலியனுக்கு குரல் கொடுத்தது யார் என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர். அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக படக்குழு புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி படத்தில் வரும் 'அயலான்' எனப்படும் ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 12-ந்தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.