வாய்ப்புகள் மறுக்கப்படும் போது புதிய வாசல் திறக்கும் - இயக்குநர் சீனு ராமசாமி
|சினிமாவிற்கு புதிய வெளிச்சமாக ஓ.டி.டி இருக்கும் என நம்புகிறேன். புதிய தொழில்நுட்பத்தின் வழியாக தமிழ் கதைகள் மக்களை போய் சேர வேண்டும் என்று சீனு ராமசாமி கூறினார்.
'ஓடிடி பிளஸ்' என்ற புதிய ஓடிடி தள அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த ஓடிடி தளத்தில் மாதம் ரூ.29 சந்தா கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ்கள், திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் உள்ளிட்டவைகள் ஒளிபரப்பாகவுள்ளது. அதன் டிரைலர்கள் தொடக்க விழாவில் திரையிடப்பட்டன. விழாவில் சீனு ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் சமீப காலங்களில் தங்களது சினிமாக்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் சீனு ராமசாமி பேசுகையில், "இன்றைக்கு இந்த இணையதள வளர்ச்சி, அனைத்தையுமே பார்த்து படிச்சு புரிஞ்சிக்கிற அளவிற்கு வந்துவிட்டது. இன்றைக்கு பெரும்பான்மையான பெற்றோருடைய கவலை, குழந்தைகளிடம் கொடுத்த போனை எப்படி திரும்ப வாங்குவது என்பதுதான். அப்பா, அம்மா, டீச்சர் என யார் சொன்னாலும் கேட்கமாட்டேங்குறான். ஆனால் கூகுள் சொன்னால் கேட்கிறான். இப்படி இருக்கும் சூழலில் இந்த இணையதளத்தின் மூலமாக கதைகள், அதன் மூலமாக கருத்துக்கள், நல்ல செய்திகள் சொல்ல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சினிமாவிற்கு புதிய வெளிச்சமாக இந்த ஓ.டி.டி இருக்கும் என நம்புகிறேன். புதிய தொழில்நுட்பத்தின் வழியாக தமிழ் கதைகள் மக்களை போய் சேர வேண்டும். மிகப்பெரிய நிறுவனங்களுக்கு மத்தியில், இப்போது தோன்றியுள்ள இந்த ஓடிடி, நிறைய புதியவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் என நம்புகிறேன்.
எங்கெல்லாம் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதோ அங்கு ஒரு புதிய வாசல் திறந்து கொண்டே இருக்கிறது. அதை காலமும் விஞ்ஞானமும் செய்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இந்த ஓ.டி.டி பிளஸ் நிறைய தமிழ் கலைஞர்கள், உலக மக்களோடு உரையாடுவதற்கும் தன் கலைகளை வழங்குவதற்கும் உதவும். சினிமா என்பது திரையரங்கிற்கான அனுபவம். இந்தியாவை பொறுத்தவரை, ஒவ்வொரு மாநிலத்திற்கும் சினிமாவுக்கான வெளியீட்டு விதி எப்போது வந்ததோ, அந்த விதியில், சிறு படங்கள், கடை படங்கள், பெண்களுக்கான படங்கள் பாதிக்கப்பட்டுவிட்டது. ஏனென்றால் முதல் காட்சியிலே திரையரங்கிற்கு கூட்டம் வரவேண்டும் என்ற நிலை இருக்கிறது. முதல் மூணு நாளில் காட்சிகள் நிறைய வேண்டும்.
அப்போது நட்சத்திர அந்தஸ்து இல்லாத திரைப்படங்களுக்கு நிச்சயம் கூட்டம் வராது. இந்த நிலையில் மக்களிடம் படம் பேசப்பட்டு, அவர்கள் திரையரங்கிற்கு வருவது வரைக்கும் படங்களை திரையரங்கில் தாங்கி பிடிக்க முடியாது. அப்போது மூணு நாள் கழித்து அதிக தியேட்டர் கிடைக்கும் போது அந்த வியாபார விரிவு தான் சிறிய படங்களுக்கான கதவுகளை அடைத்துவிட்டது. அப்படி அடைத்தாலும் மேலும் மேலும் முயற்சி செய்து வெளியில் வருவது தான் கலையுடைய வேலை. அப்படி நிராகரிக்கப்பட்ட படங்கள், இந்த ஓ.டி.டி.யின் வழியாக, தன் வாழ்க்கையை பணயம் வைத்திருக்கும் இளைஞர்களுக்கு புது வெளிச்சம் தரும் என நம்புகிறேன்" என்றார்.