'விடாமுயற்சி' படப்பிடிப்பு தொடங்குவது எப்போது..?
|விடாமுயற்சி படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
அஜித்குமாரின் துணிவு படம் கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வந்த நிலையில் இன்னும் அவர் அடுத்து நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. துணிவு படப்பிடிப்பின்போதே அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என்று அறிவித்த நிலையில் அவர் சொன்ன கதை பிடிக்காமல் மாற்றி விட்டு இயக்குனர் மகிழ் திருமேனியை தேர்வு செய்தனர்.
படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைத்து இருப்பதாகவும் அறிவித்தனர். ஆனாலும் படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாகி வருகிறது. விடாமுயற்சி படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் படபிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெரும்பகுதி படப்பிடிப்பை துபாயில் நடத்த முடிவு செய்து உள்ளனர். சென்னை மற்றும் ஐதராபாத்திலும் சில காட்சிகளை படமாக்க உள்ளனர். படப்பிடிப்பு தொடங்குவது பற்றிய தகவல் மற்றும் இதர நடிகர், நடிகைகள் விவரம் விநாயகர் சதுர்த்தியில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. திரிஷா, தமன்னா ஆகியோர் நாயகிகளாகவும், அர்ஜுன் வில்லனாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.