< Back
சினிமா செய்திகள்
துருவ நட்சத்திரம் எப்போ ரிலீஸ்?  வெளியான  புதிய தகவல்
சினிமா செய்திகள்

'துருவ நட்சத்திரம்' எப்போ ரிலீஸ்? வெளியான புதிய தகவல்

தினத்தந்தி
|
24 Nov 2023 6:20 PM IST

'துருவ நட்சத்திரம்' படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார்

சென்னை,

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ரிது வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தின் பணிகள் 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது.

இதையடுத்து சமீபத்தில் இந்த திரைப்படம் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.இதற்கிடையே, சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க கவுதம் மேனன், ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் ரூ.2.40 கோடியை பெற்றுள்ளதாகவும், ஆனால், படத்தையும் முடிக்கவில்லை பணத்தையும் திருப்பித் தரவில்லை என அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 2 கோடியை நாளை காலை 10.30 மணிக்குள் திரும்ப செலுத்திய பிறகு துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி வழங்கியது.

தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'மன்னிக்கவும். துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்று திரைக்கு வரவில்லை. எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தோம். ஆனால் படத்தை ரிலீஸ் செய்ய இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. உலகெங்கிலும் முறையான முன்பதிவுகள் மற்றும் சரியான திரையிடல்கள் மூலம் உங்கள் அனைவருக்கும் நல்ல அனுபவத்தை தர விரும்புகிறோம். இந்த படத்திற்கான உங்களின் ஆதரவு எங்களை நெகிழ்ச்சியடைய வைக்கிறது. அது எங்களை மேலும் தொடர வைக்கிறது. இன்னும் சில நாட்களில் நாங்கள் வருவோம்' என்று பதிவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்பதால் படத்தை வெளியிடவில்லை. திங்கள் அல்லது புதன்கிழமைக்குள் பணத்தை திரும்ப செலுத்திவிட்டு படத்தை வெளியிட உள்ளோம்" என தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் நவம்பர் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்