'கூலி' படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும்? - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதில்
|உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த் நேற்று வீடு திரும்பினார்.
சென்னை,
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் லியோ படத்திற்கு பின்னர் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு கூலி என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், ரஜினியுடன், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சிகிச்சைக்கு பின்னர் நேற்று ரஜினிகாந்த் வீடு திரும்பினார். சில வாரங்கள் அவர் தனது இல்லத்திலேயே ஓய்வு எடுப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், வரும் 15-ம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"மருத்துவமனையில் ஒரு சின்ன சிகிச்சை செய்ய வேண்டியது உள்ளது என சுமார் 40 நாட்கள் முன்பே ரஜினி சார் எங்களிடம் சொல்லிவிட்டார். கடந்த 28-ம் தேதி வரை அவருடைய காட்சிகளை எடுத்தோம். அதை முடித்துவிட்டுதான் அவர் இங்கு சிகிச்சைக்கு வந்தார்.
ஆனால், ரஜினிசார் உடல்நலம் குறித்து யூடியூப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசியது கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தியது. எதோ அருகில் இருந்ததுபோல பேசினார்கள். ரஜினி சார் நலமுடன் இருக்கிறார். ஆண்டவன் அருளால் அவர் என்றும் நலமுடன் இருப்பார். அடுத்த 10 நாட்கள் படப்பிடிப்பு கிடையாது. வரும் 15-ம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம்" என்றார்.