பேட்மிண்டன் வீரருடன் திருமணம் எப்போது? நடிகை டாப்சி விளக்கம்
|பேட்மிண்டன் வீரருடன் திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு நடிகை டாப்சி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழில் 'ஆடுகளம்' படம் மூலம் அறிமுகமான டாப்சி தொடர்ந்து 'ஆரம்பம்', 'வை ராஜா வை' போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். குறிப்பாக இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். டாப்சியும், டென்மார்க் நாட்டை சேர்ந்த மத்தியாஸ் போயும் காதலித்து வருகிறார்கள். "எங்கள் காதலை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. காதலை குடும்பத்தினர் ஏற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது'' என்று டாப்சி கூறியிருந்தார்.
இந்த நிலையில் டாப்சியிடம் உங்களுக்கு திருமணம் எப்போது? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து டாப்சி கூறும்போது, "நானும், மத்தியாஸ் போயும் 9 வருடங்களாக காதலித்து வருகிறோம். எனது சம காலத்து நடிகைகள் பலருக்கு திருமணம் முடிந்துள்ளது.
ஆனால் நான் திருமணத்துக்கு அவசரப்படவில்லை. நாங்கள் இவ்வளவு காலம் காதலித்து வருவது பெரிய விஷயம்.
இந்த உறவில் இருந்து நாங்கள் விலக நினைக்கவில்லை. எனது சொந்த வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் போட்டி எதுவும் இல்லை. எனது காதல் வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேச விரும்பவில்லை'' என்றார்.