பட தோல்வியால் உணவகம் திறக்க முடிவெடுத்து சமையல் கற்ற பாலிவுட் சூப்பர் ஸ்டார்
|200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 'ஜீரோ' ரூ. 186 கோடி மட்டுமே வசூலித்தது.
மும்பை,
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இந்திய சினிமாத்துறையில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார். 2002-ல் வெளியான தேவதாஸ் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதனைத்தொடர்ந்து, இவரது நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'ஜீரோ'. இப்படத்தில் அனுஷ்கா ஷர்மா, கத்ரீனா கை, சல்மான் கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் வெறும் ரூ. 186 கோடி மட்டுமே வசூலித்தது. முன்னணி நடிகை, நடிகர்கள் நடித்திருந்தும் இப்படம் எதிர்பார்த்தபடி வெற்றியடைய வில்லை.
அதனைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியது. இதனால் ஷாருக்கான் தன் குடும்பத்துடன் நேரத்தை கழித்தார். இந்நிலையில், அந்த தொற்றுநோய் காலம் தனக்கு பல நல்ல மற்றும் கெட்ட விஷயங்களை கொடுத்ததாக நடிகர் ஷாருக்கான் கூறி இருக்கிறார். அவர் கூறுகையில்,
'தொற்றுநோய் காலம் எனக்கு பல நல்ல மற்றும் கெட்ட விஷயங்களை கொடுத்தது. என்னுடைய அன்புக்குரியவர்களுடன் அதிக தரமான நேரத்தை செலவிட வாய்ப்பு கொடுத்தது. நான் நடித்த 'ஜீரோ' வெற்றியடையாததால் அடுத்து நான் நடிக்கும் படங்களை மக்கள் விரும்புவார்களா? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. இதனால் ஒரு உணவகத்தைத் திறக்க முடிவெடுத்தேன். இதற்காக நான் இத்தாலிய உணவை சமைக்க கற்றுக்கொண்டேன்', என்றார்
கடந்தாண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான், ஜவான் திரைப்படங்கள் 1,000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.