வாரிசுகளுக்கே வாய்ப்பு - சினிமா பின்னணி இல்லையென்றால்...- பிரீத்தி ஜிந்தா
|சினிமா பின்னணி இல்லாதவர்களுக்கு இந்தி திரையுலகம் சாதகமாக இல்லை என்று பிரீத்தி ஜிந்தா கூறினார்.
மும்பை,
பிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா. இவர் தனது முதல் படமான தில் சே மூலம் பெரிய வரவேற்பை பெற்றார். 2016-ல் அமெரிக்காவை சேர்ந்த ஜீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ஐ.பி.எல். பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருக்கிறார்.
இந்த நிலையில் இந்தி திரையுலகில் வாரிசுகள் ஆதிக்கம் இருப்பதாக சாடி உள்ளார். இதுகுறித்து பிரீத்தி ஜிந்தா அளித்த பேட்டியில், "சினிமா பின்னணி இல்லாதவர்களுக்கு இந்தி திரையுலகம் சாதகமாக இல்லை.
சினிமா பின்னணியில் இருந்து வரும் வாரிசு நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அவர்கள்தான் சினிமாவில் வளர முடியும் என்ற நிலைமை இருக்கிறது.
எப்படிப்பட்ட கதாபாத்திரங்களையும் செய்ய திறமையானவர்கள் உள்ளனர். அவர்கள் வாரிசு நடிகர், நடிகைகளை தாண்டி ஜெயிப்பது கஷ்டம். சினிமா வாரிசுகள் மட்டுமே இங்கு நிலைக்க முடியும். சினிமா பின்புலம் இல்லாதவர்கள் எப்போதும் ஒரு வித பயத்திலேயேதான் இருக்கிறார்கள்'' என்றார். பிரீத்தி ஜிந்தாவின் கருத்து வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.