'என்ன உடை அணிந்தாலும் விமர்சிக்கிறார்கள்' - அனிகா
|என்ன உடை அணிந்தாலும் விமர்சிக்கிறார்கள், அது என்னை மிகவும் பாதிக்கிறது என்று அனிகா கூறினார்.
சென்னை,
2015-ம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்...' படத்தில் திரிஷாவின் மகளாக அனிகா நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அதனைத்தொடர்ந்து 'நானும் ரவுடிதான்', 'மிருதன்', 'விஸ்வாசம்' ஆகிய படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார்.
கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான 'புட்டபொம்மா' படத்தில் கதாநாயகியாக அனிகா அறிமுகம் ஆனார். மலையாள படங்களில் தொடர்ந்து கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். மலையாளத்தில் 'சின்ன நயன்தாரா' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் அனிகா, அவ்வப்போது தனது கலக்கல் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
இதற்கு ரசிகர்கள் ஆதரவான கருத்தை தெரிவித்தனர். இன்னும் சிலர் கடுமையாக விமர்சித்து அவதூறு பதிவுகள் வெளியிட்டனர். ஆடைக்கு எதிராக வரும் மோசமான கமெண்ட்டுகளுக்கு அனிகா பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "எனக்கு ஸ்டைலான ஆடைகள் அணிவது பிடிக்கும். கவர்ச்சியான உடைகள் அணிவது என்பது எனது தனிப்பட்ட விஷயம்.
ஆனால், என்ன உடை அணிந்தாலும் விமர்சிக்கிறார்கள். தவறாக பேசுகிறார்கள். இது என்னை மிகவும் பாதிக்கிறது. நானும் ஒரு மனுஷிதான். சினிமாவில் இருக்கும் பெண்கள்தான் பெரிய அளவில் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்கிறார்கள்'' என்றார்