நீங்கள் பார்த்ததே 'காந்தாரா' இரண்டாவது பாகம் தான் - இயக்குனர் ரிஷப் ஷெட்டி
|இப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.
இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
இதில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி பேசியதாவது, "கடந்த ஆண்டு வெளியானது 'காந்தாரா' படத்தின் இரண்டாம் பாகம். இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும். இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது குறித்தும் அந்த தெய்வத்தின் பின்னணி குறித்தும் சொல்லும் கதைக்களமாகத் தான் அமையும். கதைக்கான பணி நடந்து கொண்டிருப்பதால் படம் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும்" என்று கூறியுள்ளார்.