< Back
சினிமா செய்திகள்
நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா மீது எடுத்த நடவடிக்கை என்ன? - ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி
சினிமா செய்திகள்

நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா மீது எடுத்த நடவடிக்கை என்ன? - ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி

தினத்தந்தி
|
4 Jan 2024 7:20 PM IST

தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

கொடைக்கானலில் விதிகளை மீறி பங்களா கட்டி வரும் நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி எழுப்புயுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில், வில்பட்டி கிராமத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் பங்களா கட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமலும், விதிகளை பின்பற்றாமலும் கட்டடங்கள் எழுப்பி உள்ளதாகவும் இதனால் மண் சரிவு ஏற்பட்டு அருகில் உள்ள வீடுகளும் இடிவதற்கு சாத்தியங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரண்டு கட்டடங்களின் கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை பதிவு செய்த ஐகோர்ட்டு மதுரைக்கிளை, இருவர் மீதும் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என கேள்வி எழுப்பியது. இந்த வழக்கில் தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட ஐகோர்ட்டு மதுரைக்கிளை விசாரணையை 9-ந்தேதிக்கு தள்ளிவைத்து உள்ளது.


மேலும் செய்திகள்