சல்மான் கானை கொலை செய்ய பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள்; அதிர்ச்சி தகவல்
|நடிகர் சல்மான் கானை கொலை செய்ய லாரன்ஸ் பிஷ்னோய், உறவினர் அன்மோல் பிஷ்னோய் உள்ளிட்டோர், பாகிஸ்தானில் உள்ள ஆயுத விநியோகிப்பாளர்களிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கி உள்ளனர்.
புனே,
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீடு, மராட்டிய மாநிலம் மும்பை நகரின் பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. இதன் வெளிப்பகுதியில் கடந்த ஏப்ரல் 14-ந்தேதி, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றனர்.
சல்மான் கானுக்கு ஏற்கனவே 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டை தொடர்ந்து அவரது வீடு முன்பு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவத்தில், துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் இருவரை குஜராத் மாநிலம், புஜ் பகுதியில் பதுங்கியிருந்தபோது போலீசார் கைது செய்தனர். அவர்கள் விக்கி குப்தா, சாகர் பால் என அடையாளம் காணப்பட்டனர். இதேபோன்று, அனுஜ் தபன் மற்றும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டனர். வழக்கில், மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸ் காவலில் தபன் உயிரிழந்து விட்டார். இதுபற்றி தபனின் தாயார் தேவி தரப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கானை சுட்டு கொல்ல மற்றொரு சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. சல்மான் கானை கொலை செய்ய பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் பெறப்பட்டு உள்ளன என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.
இதன்படி, மராட்டியத்தின் பன்வெல் நகரில், அவருடைய காரை தாக்க திட்டமிட்டு உள்ளனர். இதற்காக பாகிஸ்தானில் உள்ள ஆயுத விநியோகிப்பாளர்களிடம் இருந்து ஆயுதங்கள் பெறப்பட்டு உள்ளன.
சிறையில் அடைக்கப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கனடாவில் உள்ள அவருடைய உறவினரான அன்மோல் பிஷ்னோய் இவர்களின் கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர், ஏ.கே.-47, எம்-16 மற்றும் பிற உயர்ரக ஆயுதங்களை வாங்கி உள்ளனர்.
இதன்படி, சல்மான் கானின் வாகனம் அல்லது அவருடைய பண்ணை வீட்டை கும்பலாக சென்று தாக்குவது என திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால், அது நடைபெறவில்லை. அதற்கு பதிலாக 2-வது திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்கான காரணம் எதுவும் தெரிய வரவில்லை.