< Back
சினிமா செய்திகள்
2026ல் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் - விஜய் பேசியதாக பரவும் ஆடியோ
சினிமா செய்திகள்

"2026ல் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்" - விஜய் பேசியதாக பரவும் ஆடியோ

தினத்தந்தி
|
30 Sep 2023 9:24 AM GMT

"விஜய் குரலில் சமூக வலைதளத்தில் பரவி வரும் ஆடியோ போலியானது" என விஜய் மக்கள் இயக்க மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் அக்டோபர் 19 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் பேசியதாக சமூகவலை தளத்தில் ஆடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த ஆடியோவில், லியோ திரைப்படம் கர்நாடகாவில் வெளியிடப்படாது. 2026-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் பெரிய விளைவுகளை சந்திக்கும். மேலும் நடிகர் சித்தார்த் நடித்துள்ள சித்தா திரைப்படத்திற்கு கர்நாடகாவில் எழுந்துள்ள எதிர்ப்புக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் விஜய் குரலில் பேசப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது, நடிகர் விஜய் பேசியதாக பரப்பப்படும் ஆடியோவிற்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதில் அவர் பேசியதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. எனவே அவர் மீது தவறான தகவல் பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் இந்த ஆடியோ லியோ படத்தின் புரோமோஷனை கெடுக்கும் அளவிற்கு உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தெரிவித்து உள்ளது.

தற்போது லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து, போன்ற பல சர்ச்சைகளில் இருக்கும் நடிகர் விஜய்க்கு தற்போது இந்த ஆடியோ மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்