நாங்கள் சமத்துவத்தின் பக்கம் நிற்கிறோம் - நடிகர் பிரகாஷ் ராஜ்
|தமிழக துணை முதல்-அமைச்சர் சமத்துவம் குறித்து பேசிக்கொண்டு இருக்கும்போது, ஆந்திர துணை முதல்வர் சனாதனம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.
சென்னை,
அண்மையில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், திருப்பதி லட்டை வைத்து போலி ஆன்மிகம் பேசி வருவதை, அரசியல் செய்வதாக பிரகாஷ் ராஜ் விமர்சித்திருந்தது பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது. பவன் கல்யாண், 'சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்' என்று பேசியதற்கு, உதயநிதி ஸ்டாலின் 'யார் அழியப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்' என்று பேசியிருந்தார். இது ஆந்திரா துணை முதலமைச்சர் – தமிழ்நாடு துணை முதலமைச்சர் என எதிரும் புதிருமானது.
இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் 'திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா நூல்கள் வெளியீட்டு விழா' நடைபெற்றது. திருச்சி சிவா, பிரகாஷ் ராஜ் இருவரும் நண்பர்கள். இதன் அடிப்படையில் இவ்விழாவில் கலந்துகொண்டு பேசியிருக்கும் பிரகாஷ் ராஜ், "நான் எதுபேசினாலும் அரசியலாகிவிடுகிறது. என்னுடைய குரல் அரசியல்வாதியின் குரல் அல்ல. ஒரு சாதாரண மனிதன், ஒரு கலைஞனின் குரல் என்னுடையது. திருச்சி சிவா என்னுடைய நண்பர் என்பதற்காக மட்டும் நான் இந்த மேடையில் இருக்கவில்லை. அவர் குரல் மக்களுக்கான குரல். அந்தக் குரலுக்குக்காகத்தான் நான் இந்த மேடையில் இருக்கிறேன். கலைஞர் இருந்தபோது என்னைப் போன்றவர்களெல்லாம் அரசியல் பற்றி பேசவேண்டிய தேவையில்லை. கலைஞர் அவர்களே நமக்காகப் பேசிக்கொண்டிருந்தார். அவரைப் போன்றவர்கள் இப்போது இல்லை என்பதால் நாங்களெல்லாம் பேச வேண்டியத் தேவை ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதல் குரலாக பாராளுமன்றத்தில், சட்டமன்றத்தில் பேசியவர் அண்ணா. அதையடுத்து கலைஞர் பேசினார். அந்த வழியாக வந்தக் குரல்களில் ஒன்று திருச்சி சிவாவின் குரல். அந்தக் குரலுக்குக்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன். பஸ்ஸில் 'திருடர்கள் ஜாக்கிரதை' என்று போர்ட் போடுவார்கள். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அங்க ஒரு துணை முதலமைச்சர் 'சனாதனம்' பேசுகிறார். இங்கு இருக்கும் துணை முதலமைச்சர் 'சமத்துவம்' பேசுகிறார். நாங்கள் சமத்துவம் பேசுவர்கள் பக்கம் நிற்கிறோம்" என்று கூறியுள்ளார்.