படைத்த மனிதனின் சாதியை கணக்கில் கொள்ளாமல் படைப்பின் உன்னதத்தை கொண்டாட வேண்டும் - இயக்குநர் சேரன்
|படைத்த மனிதனின் சாதியை கணக்கில் கொள்ளாமல் படைப்பின் உன்னதத்தை உணர்ந்து கொண்டாட சமூகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 15ம் தேதி வெளியான திரைப்படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இதையடுத்து படத்திற்கு கிடைத்த வரவேற்பு தொடர்பாக சமீபத்தில் விக்ரம் படக்குழுவினருக்கு உணவு விருந்து வைத்தார். இப்படத்தின் இந்தி பதிப்பு வருகிற செப்டம்பர் 6ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்திற்கு நடிகர் மற்றும் இயக்குநர் சேரன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "நேற்றுதான் தங்கலான் பார்க்க நேர்ந்தது. பா.ரஞ்சித் மற்றும் விக்ரமின அசுர உழைப்பும் அளவிடமுடியா திரை ஆற்றலும் காண முடிந்தது. ரஞ்சித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர். கதை சொன்ன விதமும் காட்சிப்படுத்திய விதமும் அசரவைத்தது. முதல்பாதி முழுவதும் ஆங்கிலப்படமாகவே இருந்தது. மண்ணின் உரிமையை இவ்வளவு சிறப்பாக எந்த படமும் சொல்லவில்லை. மொழியாடலில் இருந்த பழமை இன்னும் அழகு சேர்த்தது. விக்ரம் நம் தலைமுறை கொண்டாட வேண்டிய நபர். அந்த கதாபாத்திரத்துக்காக அவர் அவரை அர்ப்பணித்திருந்த விதம். சொல்ல வார்த்தைகள் இல்லை. இணை என எவரைத்தேடினும் கிடைக்கவில்லை.
தம்பி ஜி.வி பிரகாஷ் பெருமைப்படத்தக்க இசையால் இரைச்சலின்றி காட்சிகளை வியக்கவைத்ததை ரசித்தேன். திரைப்படத்தில் குறைகள் இருப்பினும் ரஞ்சித்தின் அரசியல் நிலைப்பாட்டை மனதில் கொள்ளாமல் (எனக்கில்லை) படைப்பு பேசிய அரசியலை கொண்டாடியே ஆக வேண்டும். அதுவே நாம் இந்த சினிமாவில் இருப்பதை அர்த்தமாக்கும். இரவுக்காட்சி முடிந்து நேரம் 1 மணி ஆனாலும் என் தொலைபேசியில் ரஞ்சித்தின் எண்ணை அழுத்தினேன். ஒருவரின் உழைப்பை பாராட்ட நேரமும் காலமும் காரணங்களும் பார்த்தால் அது பொய் என்பதால். சேதுவின் போதும் இரவுக்காட்சி பார்த்து நானும் பாலாவும் விக்ரமும் அதிகாலை 4 மணிவரை பேசியது நினைவு வந்தது. அரசியல் நிலைப்பாடு, கொள்கைகளைக் கடந்து சினிமாவை நேசிக்க அதை படைத்த மனிதனின் சாதியை கணக்கில் கொள்ளாமல் படைப்பின் உன்னதத்தை உணர்ந்து கொண்டாட சமூகம் கற்றுக்கொள்ள வேண்டும். அது எவராயினும். ஏனெனில் படைப்பாளிகளின் நோக்கம் வென்று சமூகம் சமமாகும்போது நீயும் நானும் கைகோர்த்தே ஆகவேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.