பாலாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து விலகிக்கொள்கிறோம் - சூர்யா நிறுவனம் பதில்
|பாலாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து விலகிக்கொள்கிறோம் என்று சூர்யா நிறுவனம் பதிலளித்துள்ளது.
சென்னை,
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'வணங்கான்' என்ற திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் தற்போது வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்திருப்பதாக இயக்குனர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், "என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.
என் மீதும், இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம்.
அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. நந்தாவில் நான் பார்த்த சூர்யா பிதாமகன்-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி வணங்கான் படப்பணிகள் தொடரும்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் டுவிட்டரில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம், பாலாவின் அறிக்கையை பகிர்ந்து பதிவிட்டுள்ளது. அந்தப் பதிவில், "பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யாவும், 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்" என்று கூறியுள்ளது.