< Back
சினிமா செய்திகள்
தேர்வு எழுதி காத்திருக்கும் மாணவரின் மனநிலையில் இருக்கிறோம் - நடிகர் கார்த்தி பேட்டி
சினிமா செய்திகள்

"தேர்வு எழுதி காத்திருக்கும் மாணவரின் மனநிலையில் இருக்கிறோம்" - நடிகர் கார்த்தி பேட்டி

Gokul Raj B
|
28 Sept 2022 2:48 PM IST

பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சோழர் வரலாற்றை படித்து தெரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

சென்னை,

கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சுமார் 500 கோடி ரூபாய் பொருட்செலவில் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பொன்னி நதி, தேவராளன் ஆட்டம் உள்பட 6 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இன்னும் 2 நாட்களில் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், புரமோஷன் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நடிகர் கார்த்தி, நடிகர் ஜெயம் ரவி, நடிகை திரிஷா ஆகியோர் இன்று சென்னை திரும்பினர்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். அப்போது பேசிய நடிகர் கார்த்தி, இந்த திரைப்படத்தின் மூலம் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சோழர் வரலாற்றையும், பொன்னியின் செல்வன் நாவலையும் படித்து தெரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு ஏற்கனவே இந்தி திரையுலகில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், அவர்கள் நமது அடையாளமாக உள்ளனர் என்றும் கார்த்தி தெரிவித்தார். மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஆங்கில திரைப்படங்களோடு ஒப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர், படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது தேர்வுக்கு தயாராகும் மாணவரின் மனநிலையில் இருப்பதாக கூறினார்.

மேலும் செய்திகள்