வயநாடு நிலச்சரிவு சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது... நடிகர் சூர்யா வேதனை
|வயநாடு நிலச்சரிவு சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக நடிகர் சூர்யா வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை,
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் வயநாட்டில் கனமழை காரணமாக அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியானது கொட்டும் மழையிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவு சம்பவத்திற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருவதோடு நிதி உதவியும் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு சம்பவத்திற்கு நடிகர் சூர்யா வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "வயநாடு நிலச்சரிவு சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது பிரார்த்தனைகளை தெரிவித்துக் கொள்கிறேன். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும், களத்தில் உள்ள பொது மக்களுக்கும் தலைவணங்குகிறேன்!" என்று அதில் பதிவிட்டுள்ளார்.