பதான் படம் பார்க்க... பீகார்-மேற்கு வங்காளம் வரை மாற்று திறனாளி சகோதரரை தோளில் சுமந்து சென்ற நபர்
|பதான் படம் பார்க்க விரும்பிய தனது மாற்று திறனாளி சகோதரரை பீகாரில் இருந்து மேற்கு வங்காளம் வரை நபர் ஒருவர் தோளில் சுமந்து சென்றுள்ளார்.
கொல்கத்தா,
பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் முகமது ருஷ்டம். மாற்று திறனாளியான இவரால், சொந்த காலில் நிற்க கூட முடியாது. இவரது சகோதரர் சாஜத்.
ஷாருக் கானின் தீவிர ரசிகரான ருஷ்டம், பதான் படம் பார்க்க வேண்டும் என விரும்பி உள்ளார். முதல் நாள் தொடக்க காட்சியை பார்த்து விடும் ஆவலில் இருந்து உள்ளார். ஆனால், பாகல்பூரில் எவ்வளவு முயன்றும் அவருக்கு ஒரு டிக்கெட் கூடகிடைக்கவில்லை.
அதன்பின், தனது சகோதரரின் உதவியை நாடியுள்ளார். சகோதரர் சாஜத் ஆதரவுடன் மேற்கு வங்காளத்திற்கு பயணப்பட்டு மால்டா மாவட்டத்திற்கு சென்றுள்ளார். சம்சி நகரில் உள்ள பவன் திரையரங்கில் பதான் படம் பார்க்க சென்றுள்ளார்.
இந்த பயணத்தில் செல்லும் இடமெல்லாம், தனது சகோதரரை சாஜத் தோளில் சுமந்தபடியே சென்றுள்ளார். இந்த வீடியோ வைரலாகி பலரும் ஆச்சரியம் தெரிவித்து உள்ளனர். பதான் படம் உலக அளவில் ரூ.600 கோடி வசூலித்து உள்ளது.