அமிதாப்பச்சனுடன் நடித்த படம் கைவிடப்பட்டதா? - எஸ்.ஜே.சூர்யா விளக்கம்
|சில வருடங்களுக்கு முன்பு அமிதாப்பச்சனுடன் இணைந்து 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடிக்க இருப்பதாக எஸ்.ஜே.சூர்யா அறிவித்தார்.
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு இந்தி நடிகர் அமிதாப்பச்சனுடன் இணைந்து 'உயர்ந்த மனிதன்' என்ற படத்தில் நடிக்க இருப்பதாக எஸ்.ஜே.சூர்யா அறிவித்தார். தமிழ், தெலுங்கில் தயாரான இந்த படத்தை தமிழ்வாணன் இயக்கினார்.
ஆனால் படப்பிடிப்பை தொடங்கிய சில நாட்களிலேயே தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் படத்தில் இருந்து அமிதாப்பச்சன் விலகியதாக கூறப்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதுவரை அந்த படத்தை மீண்டும் தொடங்கவில்லை. படம் கைவிடப்பட்டதா என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.
இதற்கு பதில் அளித்து எஸ்.ஜே.சூர்யா அளித்துள்ள பேட்டியில், "நான் 'உயர்ந்த மனிதன்' படத்தை எடுக்க நிறைய கஷ்டப்பட்டு விட்டேன். அந்த படத்துக்காக இயக்குனருடன் கதை விவாதத்தில் ஈடுபட்டு படப்பிடிப்பை தொடங்கிய நிலையில் சில பிரச்சினைகளால் நின்றுபோனது. கடவுள் ஏன் கஷ்டத்தை கொடுத்தார் என்று தெரியவில்லை. நிச்சயம் அந்த படத்தை எடுப்பேன். அமிதாப்பச்சன் அதில் நடிப்பார்" என்று கூறினார்.