"அவர் ஒரு இருள்ராஜ்" பிரகாஷ்ராஜை கடுமையாக விமர்சித்த பிரபல டைரக்டர்
|பிரகாஷ்ராஜ் பேச்சுக்கு தி காஷ்மீர் பைல்ஸ் பட டைரக்டர் விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை
ஷாருக்கான் நடிப்பில் பதான் படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியானதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது. தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து பேஷாரம் ரங் பாடலில் தோன்றியது கடும் சர்ச்சைக்கு உள்ளானது.
பதான் படத்திற்கு வலது சாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தின. இந்த நிலையில், பதான் இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாவது இடம் பிடித்ததோடு பல்வேறு வசூல் சாதனைகளை படைத்துள்ளது.
பதான் படத்தில் இடம்பெற்றுள்ள 'பேஷாரம் ரங்' பாடல் சர்ச்சையில் சிக்கி பல விமர்சனங்களை சந்தித்தபோது பதான் பாடலுக்கு எதிரான கருத்துகளுக்கு பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இது குறித்து பிரகாஷ்ராஜ் கூறும் போது இந்த படத்தை எதிர்த்தவர்களால் பிரதமர் நரேந்திர மோடி படத்திற்கு 30 கோடி ரூபாய் கூட வசூல் செய்ய முடியவில்லை. காஷ்மீர் பைல்ஸ் என்கிற பிரச்சார படத்தை எடுத்தார்கள். அந்த படத்தை பார்த்துட்டு சர்வதேச கலைஞர்கள் துப்பினார்கள். அப்படியும் கூட இவர்களுக்கு எல்லாம் புத்தியே வரவில்லை.
காஷ்மீர் பைல்ஸ் படத்தை இயக்கிய டைரக்டர் வேறு இந்த படத்துக்கு ஏன் ஆஸ்கர் கொடுக்கவில்லை? என்று சொன்னார். ஆஸ்கர் இல்லை பாஸ்கர் விருது கூட கிடைக்காது என்று பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாத்ருபூமி சர்வதேச விழாவில் கலந்துக் கொண்ட பிரகாஷ் ராஜ், பதான் படம் குறித்து பேசினார். அப்போது"பதான் திரைப்படத்தை தடை செய்யவும் புறக்கணிக்கவும் அழைப்பு விடுத்தவர்கள் சும்மா "குரைப்பவர்கள்", "கடிக்கமாட்டார்கள்.. அவர்கள் பதான் திரைப்படத்தை தடை செய்ய விரும்பினர். ஆனால் படம் 700 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது. இந்த முட்டாள்கள், மதவெறியர்கள். பதானை தடை செய்ய நினைத்தவர்கள், மோடியின் (பி.எம் நரேந்திர மோடி) படத்தை 30 கோடி ரூபாய் வசூலிக்கும் அளவுக்கு கூட பார்க்கவில்லை. எல்லோருக்கும் தெரிந்ததுபோல்.அவர்கள் குரைக்கிறவர்கள், கடிக்கமாட்டார்கள் " என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் பேச்சுக்கு தி காஷ்மீர் பைல்ஸ் பட டைரக்டர் விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிவில், ஒரு சிறிய படமான தி காஷ்மீர் பைல்ஸ் படம் அர்பன் நக்சல்ஸ்களுக்கு தூக்கமில்லா இரவுகளைக் கொடுத்திருக்கிறது.
அதில் ஒருவர் அந்தப் படத்தின் பார்வையாளர்களை குரைக்கும் நாய் என குறிப்பிட்டு ஒரு வருடத்துக்கு பிறகும் கஷ்டப்படுகிறார். அந்தகர் (இருள்) ராஜ், பாஸ்கர் எனக்கு எப்படி கிடைக்கும், அவன்/அவள் எப்பொழுதும் நீங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.